Saturday, December 6, 2008

பற்றற்றுக் கைகள் நீட்டி

காற்றில் அலையும்

¦¸¡டி §À¡Ä¢ருக்கிறது வாழ்க்கை



முகம் மறைத்து மண்புதையும்

வேர் §À¡ல

உள்சென்று¦¸¡ண்டேயிருக்கிறது மனம்



நீர்தேடி வேரும்

வெயில்தேடி தளிரும்



இருபுறமும் நீள்கிறதென்

இரட்டை வாழ்க்கை
தனியன்



அந்த அனாதைகள் இல்லம் ஒரு ஆற்றின் கரையில் நிறைய மரங்களினூடே அமைந்திருந்தது. தரை நிறைய சருகுகளுடன் ஹாஸ்டல் வெறிச்சென்றிருந்தது. அவ்வப்போது அடித்த காற்று சருகுகளைப் புரட்டி போட்டபடி இருந்தது.

துணிகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தன் பையை கிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். எல்லா மாணவர்களும் தீபாவளிக்காக ஊருக்குச் சென்றிருந்தார்கள். தானும் ஊருக்குச் செல்வோம் என்ற நம்பிக்கை அவனிடமிருந்து சிறிது சிறிதாக விலகிக் கொண்டிருந்தது. எங்கோ வெடிகள் வெடிக்கும் சப்தம் விட்டு விட்டு கேட்டுக் கொண்டேயிருந்தது.

கிட்டு தனக்கு ஞாபகமிருந்த முந்தின தீபாவளிகளை நினைத்துப் பார்த்தான். எதுவும் மகிழ்ச்சி தரும் ஞாபகங்களாக இல்லை. கிட்டு எல்லா தீபாவளைகளையும் தனியாக இங்கேயேதான் கழிக்க நேர்ந்தது. யாராவது வந்து அழைத்துச் செல்வார்களென இன்று போலத்தான் அப்போதும் நான்கு நாட்கள் முன்னாலேயே துணிகளைத் துவைத்து, தூங்கும்போது தலைக்கடியில் வைத்து மடித்து தயாராக காத்திருந்திருக்கிறான். அந்த எல்லா இரவுகளிலும் கிட்டு அழுகையினூடே விழித்துக் கிடந்திருக்கிறான்.

ஒவ்வொரு முறையும் சக மாணவர்கள் ஊருக்குச் சென்று வந்தபிறகு தீபாவளி பற்றி அவர்கள் கூறுவதெல்லாம் கிட்டுவின் எண்ணங்களில் ஏக்கப் படிமங்களாக படிந்திருக்கிறது. எல்லோருக்கும் தான் பார்த்தே அறியாத அப்பா, அம்மா என யாராரோ இருக்கிறார்கள், ‘தனக்கு ஏன் அவர்கள் இல்லாமல் போனார்கள்’ என கிட்டு நிறைய முறை யோசித்துப் பார்த்திருக்கிறான்.

ஊரிலிருக்கும் பாட்டி வந்து தன்னை அழைத்துச் செல்வதாய் நினைத்துப் பார்த்துக் கொண்டான். அவளால் பஸ்ஸெல்லாம் ஏறி வரமுடியாதென கிட்டுவுக்கு நன்றாகவே தெரியும். முடிந்தாலும் வரமாட்டாள். பாட்டியிடம் கிட்டு தன் பெற்றோரைப் பற்றி நிறைய தடவை கேட்டிருக்கிறான். அதற்கு அவள் ‘ அப்பனாத்தால முழுங்கிட்டுதான் நீ வந்து பொறந்திருக்கறே...’ என திட்டத் துவங்கிவிடுவாள். கிட்டுவும் திருப்பித் திட்டுவான். அப்பொழுதெல்லாம் அவள், ‘நாதியத்த கம்மனாட்டி.. நீ நடுத்தெருவுலதான்டா நிக்கப் போற..’ என்பாள்.

கிட்டு அந்த தெருவின் நடுவில் நின்று கொண்டிருந்தான். இருபுறங்களிலும் அவ்வப்போது சைக்கிளோ வண்டிகளோ கடந்து போய்க்கொண்டிருந்தது. தன்னைத்தவிர எல்லோருக்கும் வீடிருக்கிறது. அப்பா அம்மா இருக்கிறார்கள். தனக்கு இல்லாதது குறித்து கிட்டுவுக்குக் கோபம் வந்தது. குனிந்து ஒரு கல்லைப் பொறுக்கிக் கொண்டான். அந்த தெருவின் சுவற்றில் வரையப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் படம் பார்ப்பதற்கு தன் பாட்டி மாதிரியே இருந்தது. அந்த முகத்தைக் குறிவைத்து எரிந்தான். செங்கல் அந்த படத்தின் நெற்றியில் பொட்டொன்றை வைத்துவிட்டுச் சிதறியது. ஒருநாள் கோவிலுக்கு சென்று வந்து பாட்டியின் நெற்றியில் குங்குமத்தை அப்பியபோது பளீரென அறைந்திருக்கிறாள்.

தாத்தாவின் இறப்புக்குப் பிறகு அவள் பொட்டு வைத்துக் கொள்வதே இல்லையாம். இப்பொழுது பொட்டு வைத்தபடி எதிரேயிருக்கும் படத்தைப் பார்த்து கிட்டு சிரித்துக் கொண்டான்.

தெருமுனையில் வார்டன் முத்தண்ணன் வருவதைக் கண்டு ஹாஸ்டல் காம்பவுண்டுக்குள் வந்து நின்று கொண்டான். பின்னாலிருந்து கிட்டுவை நோக்கி சபரி கால்களை இழுத்து இழுத்து மண்ணைக் கிளறியபடி வந்துகொண்டிருந்தான். கிட்டுக்கு அவனைப் பார்க்கும்போது சில சமயம் பாவமாய் இருக்கும். சில சமயம் அவன் செயல்கள் கோபமூட்டுவதாய் இருக்கும். அப்பொழுதெல்லாம் ‘நொண்டிக்கு நூத்தியெட்டு கெரகம்’ என நினைத்துக் கொள்வான்.

சபரி “கிட்டா.. நீ ஊருக்குப் போகல.?” என்றான்.

கிட்டு பதில் பேசாமல் திரும்பிக் கொண்டான்.



“எனக்குதான் தாத்தா செத்துப் போயிட்டாரு.. இந்த வருஷம் தீபாவளி கெடையாது. ஒனக்கும் கெடையாதா.?”.

கிட்டு பதில் சொல்லு முன் முத்தண்ணன் வந்தார்.

“என்னடா கிட்டா.. யாரும் வரலியா.?” என்றார். கிட்டுவுக்கு யாராவது நிச்சயம் வருவார்கள் என சொல்ல தைரியம் வரவில்லை.

“சரி.. இங்கதான இருக்கப் போற. ஸ்டோர் ரூம்ல கொஞ்சம் வெடி இருக்கும். ரெண்டுபேரும் எடுத்துக்கங்க. சபரிக்கு பெரிய வெடியெல்லாம் கொடுக்காத. நாளைக்கு சட்டை டவுசர் ஏதாவது கெடைச்சா கொண்டு வர்றேன். என்ன..?” என கடந்து சென்றார்.

முத்தண்ணன் தலை மறையும்வரை பார்த்திருந்துவிட்டு சட்டென்று ஓட எத்தனித்த கிட்டுவின் கால்களை சபரி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். கிட்டு தடுமாறி கீழே விழுந்தான். கிட்டுவுக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. சபரி “நீ மட்டும் எடுத்துக்கலாம்ன்னு பாக்குறியா.?” என்றான் சிரித்துக்கொண்டே. கிட்டு “நொண்டிக் கெரகம்.. காலையா புடிக்கிற.?” என கைகளை வீசி அறைந்தான். சபரியின் இடது காதுக்குக் கீழே அறை விழுந்தது. கிட்டுவுக்குக் கை வலித்தது. அடி பலமாக விழுந்திருக்கிறதென நினைத்துக்கொண்டான். சபரிக்கு கால்கள் ஊனமானதால் கைகளைத் தரையில் ஊன்றி நடந்து நடந்து நெஞ்சும் கைகளும் விரிந்திருக்கும். திருப்பி அடிக்கப் போகிறானென கிட்டு பயந்தான். பதிலாக “இதுக்குத்தான்டா உன் அப்பாவும் அம்மாவும் செத்துப் போயிட்டாங்க.. அனாதைக் கம்மனாட்டி” என்றான்.

கிட்டு சட்டென்று சபரியின் கால்களைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான். கல்லிலும் மண்ணிலும் இழுத்ததில் சபரியில் கால்களில் சதை தேய்ந்து ரத்தம் தெரிந்தது. சபரி “டேய் வேணான்டா.. விடுறா. இனிமே சொல்ல மாட்டேன்டா.” என கதறினான். கிட்டுவின் காதுகளில் ‘அனாதை.. அனாதை’ என சொற்கள் சுழன்று மோதிச் சிதறின. சபரியின் குரலிலிருந்து பாட்டியின் குரலாக மாறியது.

சுவற்றில் பார்த்த உருவம் கூறுவது போல் இருந்தது. சபரியின் கால்களை விட்டு விட்டான். முத்தண்ணன் பார்த்தால் அடிப்பாரென்ற பயம் வந்தது. அங்கிருந்து மெல்ல நழுவி ஸ்டோர் ரூமுக்கு வந்தான். பூட்டியிருந்தது. ஆத்திரத்துடன் கதவை எட்டி உதைத்தான். ரூமுக்குள் தொம்மென சப்தம் வந்தது.

அங்கிருந்து ஆற்றங்கரைக்கு வந்தான். மணல் விரிந்து கிடந்தது. பெரிய மூங்கில் கம்பு ஒன்றை கையில் எடுத்து சுழற்றிக் கொண்டே நடந்தான். கரையில் காட்டாமணி செடிகள் நிறைய இருந்தது. மூங்கில் கழியைச் சுழற்றி செடிகளை அடித்தான். இலைகள் சிதறித் தெறித்தன. உள்ளிருந்து வண்டுகள் அதிர்ந்து பறந்தன. கிட்டுவுக்கு யார் மேல் கோபம் எனத்தெரியவில்லை. முகமே பார்த்தறியாத தாய் தந்தை மீதா, பாட்டி மீதா, ஊருக்குச் சென்றுவிட்ட சக பையன்களின் மீதா, சபரி மீதா.. யாரெனத் தெரியவில்லை. கைகள் ஓய்ந்து போகும் வரை அடித்தான். எந்தச் செடியும் முழுமையாக இல்லை. செடிகளின் உள்ளிருந்து தவளை ஒன்று ஓடிவந்தது. அதன்முன்னே சென்று நின்றுகொண்டான். தவளை நகராமல் இருந்த இடத்திலேயே இருந்தது. மூங்கில் கழியை அதன்முன் அரையடி தூரத்தில் வைத்துக் கொண்டான். தவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. சட்டெனத் தவளை தாவியபோது பந்துபோல் அதை அடித்தான். கால்களைப் பரப்பிக்கொண்டு தூரத்தில் போய் விழுந்தது. கிட்டுவுக்குக் கோபம் தணிந்ததுபோல் இருந்தது. மூங்கில் கழியை தலைக்குமேல் சுழற்றி வீசியெறிந்தான். எங்கோ செடிகளுக்கிடையில் சென்று விழ்ந்தது.

கரையை ஒட்டிய தோப்பில் மாமரம் ஒன்றி இருந்தது. கிட்டு கற்களைப் பொறுக்கிக் கொண்டான். ஏழாவது கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுந்தன. பொறுக்கி டவுசர் பைக்குள் போட்டுக் கொண்டான். மெல்ல இருள் கவியத் தொடங்கியது. தவளை விழுந்த இடத்தைச் சென்று பார்த்தான். கால்களைப் பரப்பிக் கொண்டு விழுந்த இடத்திலேயே அது கிடந்தது. அது கிடந்தவிதம் கிட்டுவுக்கு சபரியை ஞாபகப்படுத்தியது. அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.

ப்ரேயர் ஹாலின் படிக்கட்டுகளில் சபரி அமர்ந்திருந்தான். கிட்டு ஓட்டத்தை நிறுத்தி நடக்க ஆரம்பித்தான். அழுது ஓய்ந்த சபரியின் முகம் வீங்கியிருந்தது. கிட்டுவைப் பார்த்ததும் சட்டெனத் திரும்பிக் கொண்டான். கிட்டு மெல்ல சபரியின் அருகில் வந்து நின்றான். பாக்கெட்டிலிருந்து ஒரு மாங்காயை எடுத்து சபரியிடம் நீட்டினான். சபரி கோபமாக் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான். கிட்டுவுக்கு சபரி அடிக்கமாட்டானென நம்பிக்கை வந்தது. சபரியின் அருகில் அமர்ந்துகொண்டான். மீண்டும் மாங்காயை நீட்டினான். சபரி விறைப்பாக வாங்கிக் கொண்டான். கிட்டுவுக்கு சபரியை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும்போல் தோன்றியது.

“உப்பு வேணுமா.?” என்றான். சபரி ஆமெனத் தலையசைத்தான். சட்டென்று கீழே கிடந்த பேப்பரைப் பொறுக்கிக்கொண்டு கிட்டு சமையலறை நோக்கி ஓடினான். ஜன்னலில் கைவிட்டு சிறிது உப்பை அள்ளி பேப்பரில் மடித்துக் கொண்டு ஓடிவந்து சபரியின் அருகில் அமர்ந்துகொண்டான்.

கிட்டு “இனிமே உன்னை அடிக்கமாட்டேன்டா.” என்றான். “வலிக்குதா.?” என கால்களைத் தொட்டுப் பார்த்தான். சபரி மாங்காயைத் தின்று கொண்டிருந்தான்.

“நீ ஏன் என்னை அனாதைன்னு சொன்னே.?”

“நீ மட்டும் என்னை நொண்டின்னு சொல்லலாமா.?” என்றான்.

“ஆமா.. நீ நொண்டிதான.?”

“நீயும் அனாதைதான.?”

சட்டென கிட்டுவுக்கு ‘தான் தனித்து விடப்படுவோம்’ என்ற பயம் வந்தது. இருந்த ஒரேயொரு துணையையும் இழக்கத் தயங்கினான்.

பேச்சை மாற்றியவனாக..

“டேய்.. வெடி எடுக்கலாம்னு ஸ்டோர் ரூமுக்குப் போனேனா.. பூட்டியிருக்குடா. நாளைக்கு வெடிக்கலாம்.. என்ன.?” என்றான்.

சபரி சட்டென சுவாரசியப்பட்டவனாக “மத்தாப்பு, சக்கரம், புஸ்வானம்ல்லாம் எனக்கு.. பெரிய வெடியெல்லாம் நீ வெச்சுக்க.. சரியா.?”



முழுமனதில்லாமல் கிட்டு சரியென ஒப்புக்கொண்டான். வாசலில் முத்தண்ணன் கூட யாரோ வந்துகொண்டிருந்தார்கள். சட்டென சபரி “எங்க மாமாடா” என படிகளிலிறங்கி தவழ்ந்து செல்ல ஆரம்பித்தான்.

முத்தண்ணன் சபரியிடம் “டேய்.. நாலு நாள்ல வந்துரணும்.. சரியா.?” என்றார். சபரி சந்தோஷமாக தலையாட்டினான். தன் மாமாவிடம் “மாமா.. கிட்டுவையும் கூட்டிட்டுப் போலாமா.?” என்றான். அவர் முத்தண்ணனைப் பார்த்தார்.

முத்தண்ணன் “ இல்ல.. நீங்க போங்க.. அவன் வீட்லருந்து ஆள் வருவாங்க..” என்றார்.

சபரியின் மாமாவுக்கும் ‘கிட்டுவை கூட்டிச் செல்வதிலெல்லாம் விருப்பமில்லை’ என்பது போல, “சரி வர்றேங்க..” என வேகமாக நகர்ந்தார். சபரி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தரையில் ஊர்ந்து செல்லத் துவங்கினான். அவன் பார்வை கெஞ்சுவது போல் இருந்தது.

‘தானும் போகப்போவதில்லை’ என மறுத்து சபரி தன்னுடன் இருந்து விடுவானென கிட்டு நினைத்தான். சபரி சந்தோஷமாக மாமாவிடம் பேசியபடி சென்று கொண்டிருந்தான். அவனை அடித்தது சரிதானென கிட்டு நினைத்துக் கொண்டான்.

“கிட்டா.. நீ போய் படிச்சிக்கிட்டிரு.. நைட்டு சாப்பாடு கொண்டு வந்து தர்றேன்.” என முத்தண்ணன் சென்றார்.

பாட்டி இனி வரவே மாட்டாள் எனத் தீர்மானமாகத் தெரிந்ததும் கிட்டுவுக்கு அழுகை வரும்போல் இருந்தது. பழைய வெறுப்பு வரத் துவங்கியது.

பாதி சாப்பிட்ட மாங்காயை வீசியெறிந்தான். எங்கோ தூரத்தில் அது சென்று விழும் ஒலி கேட்டது. சபரி விட்டுப் போயிருந்த மாங்காய் படிகளின் மேல் இருந்தது. எட்டி உதைத்தான். சுவரில் தெறித்துச் சிதறியது.

மிக அருகிலேயே வீடிருந்தும் பாட்டி வராதது குறித்து யோசித்துக் கொண்டே படிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். எப்போதுமே இரைச்சலாக இருக்கும் அந்த இடம் இன்று கொடூரமான அமைதியுடன் இருப்பது கிட்டுவுக்கு பயமளித்தது. சட்டென வெளியே ஓடி வந்தான்.

வாசலை அடைத்தபடி இருந்த பெரிய கேட் பூட்டப் பட்டிருந்தது. கேட் கம்பிகளுக்கிடையில் முகத்தைப் பொருத்திக் கொண்டான். கம்பிகளின் குளிர்ச்சி கன்னத்தில் பரவியது. வெடிகளின் சப்தம் விட்டு விட்டு கேட்டுக் கொண்டேயிருந்தது.

தெருவில் சைக்கிள் டயரை உருட்டியபடி முத்தண்ணனின் பையன் சிவா வந்து கொண்டிருந்தான். கிட்டுவைப் பார்த்ததும் நின்றான். பாக்கெட்டிலிருந்து முறுக்கு ஒன்றை எடுத்து கிட்டுவிடம் நீட்டினான். கிட்டு வாங்கிக் கொண்டான். பதிலாக

ஏதாவது செய்யவேண்டும் என்பதுபோல “நாளைக்கு வர்றியா.. வெடி வெடிக்கலாம்..” என்றான். கிட்டுவுக்கு புது சிநேகிதம் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.

சிவா “நீ எப்படி தனியா இருப்பே..? ஒனக்கு பயமாயில்ல..?” என்றான்.

“ம்ஹ¥ம்.. ராத்திரிக்கு உங்க அப்பா இங்க வந்துடுவாரு.. நீயும் அவர்கூட வந்துடுறியா..?” வருகிறேன் என தலையசைத்தான்.

“நீ ஏன் ஊருக்குப் போகலே..”

கிட்டு கன்னத்தைக் கம்பிகளில் நன்றாகப் பொருத்திக் கொண்டான். கம்பிகளின் குளிர்ச்சி விட்டுப் போயிருந்தது.

“ஏன் ஒனக்கு தீபாவளி கெடையாதா.?”

சிறிது மௌனத்திற்குப் பிறகு கிட்டு

“ஆமா.. போனமாசம் எங்க பாட்டி செத்துப் போயிருச்சு..” என்றான்.